கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு - மின் கட்டண உயர்வு, கனிம கொள்ளை, கோவை மேயர் ராஜினாமா குறித்து விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். மின் கட்டண உயர்வு, கனிம கொள்ளை, கோவை மேயர் ராஜினாமா, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "தமிழ்நாட்டிற்கு தொழில் வளத்தை கொடுக்கின்ற பகுதியாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. ஆனால் மின்கட்டண உயர்வால் இப்பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 23 மாதங்களில் தமிழக அரசு மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்."

அவர் மேலும் கூறுகையில், "இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்படும். திமுக தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாதம் ஒருமுறை மின்கட்டணம் எடுக்கும் பட்சத்தில் 15 இல் இருந்து 20 விழுக்காடு மின் கட்டணம் குறையும்" என்றார்.

காவிரி நீர் மேலாண்மை குறித்து அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார். "காவிரி நீர் வரத்தால் இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நிரம்ப உள்ளது. இரண்டு நாட்களுக்கு பிறகு நீரானது கடலுக்குச் செல்லும். 57 ஆண்டுகள் ஆட்சி செய்தும் இந்த நீரை எப்படி பயன்படுத்துவது என்று இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

கோவை பகுதியில் நடைபெறும் கனிமவள கொள்ளை குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார். "கோவை பகுதியில் மிகப்பெரிய அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுகிறது. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருக்கின்றனர்" என்றார்.

கோவை நகரின் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "கோவையில் 80 விழுக்காடு சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 76 லட்சம் செலவு செய்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கோவை மேயர் ராஜினாமா குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் பாவனை குறித்தும் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்தார். "தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கத்தில் இருக்கிறது. கஞ்சா ட்ரைவ் நடத்தப்பட்டு கைதாகும் நபர்களும் 15 நாட்களில் வெளியில் வந்து விடுகின்றனர். காவல்துறையினருக்கு தெரியாமல் கஞ்சாவோ கள்ள சாராயமோ விற்க முடியாது" என்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "தமிழக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு ரத்தாக கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் ஆக்ட் - 2008 படி மாநில அரசுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கிறது" என்றார்.

பட்ஜெட் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், "48 லட்சம் கோடி பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு எதுவும் வராமலா போய்விடும்? இதுவரைக்கும் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டுகளில் அனைத்து மாநிலங்களின் பெயரும் சொல்லப்பட்டதா? கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதலாகவே நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஒரு மாநிலத்தின் பெயர் வராமல் இருப்பது பெரிய பிரச்சனையா? 3.5 லட்சம் கோடி பட்ஜெட் போடும் தமிழக அரசால் ஆயிரம் கோடி வெள்ளத்திற்கு ஒதுக்கீடு செய்ய முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

அன்புமணி ராமதாஸிடம் தொடர்ச்சியாக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆவேசமடைந்த அன்பு மணி ராமதாஸ் இரு கைகளை கும்பிட்டு "அப்பா சாமி ஆளை விட்டுடுங்க" என்றார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை எள் அளவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் கோவை மெட்ரோவிற்கான நிதியை சண்டையிட்டு வாங்குவோம் என்றும் அவர் கூறினார்.

நீட் தேர்வு குறித்து பேசிய அன்புமணி, "நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. ஏனென்றால் நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது. ஆண்டுதோறும் நீட் தேர்வினால் பயிற்சி மையங்களுக்கு இரண்டு லட்சம் கோடி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் கூடுதல் வருமானம் வருகிறது. எனவே நீட் தேர்வு என்பது பணக்காரர்களுக்கானதே தவிர ஏழைகளுக்கானது இல்லை. என்றார்.

100% தேர்ச்சி அடைந்த தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவை விமர்சித்த அன்புமணி ராமதாஸ், "முன்பு 100% தேர்ச்சியடைந்த அரசு பள்ளிகளின் முதல்வர்கள் அழைக்கப்பட்டு பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. தற்போது 100% தேர்ச்சி அடைந்த தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நிறுவனர், தாளாளர், முதல்வர் என அனைவரையும் அழைத்து அரசு சார்பில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் கல்வித்துறை அமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சரும் கலந்து கொள்ள உள்ளதாக செய்தி வந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது இந்த விழாவை நிறுத்த வேண்டும்." என்று கூறினார். மேலும், "இன்றைக்கு மூன்றில் இரண்டு விழுக்காடு தனியார் பள்ளிகள் வந்து விட்டதாகவும் தொடர்ந்து அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாகவும் இதனை அரசின் தோல்வியாகவே கருதுவதாகவும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...