வனத்துறையினரின் மெத்தனப் போக்கால் உயிரிழப்பு - எஸ்.பி. வேலுமணி கண்டனம்

கோவை தொண்டாமுத்தூர் விரலியூர் பகுதியில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையின் அலட்சியம் குறித்து எஸ்.பி. வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர், உடனடி நடவடிக்கை கோரியுள்ளார்.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் விரலியூர் பகுதியில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

எஸ்.பி. வேலுமணி கூறுகையில், "தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் அடிக்கடி வருவதால் பயிருக்கும் பாதுகாப்பில்லை, உயிருக்கும் பாதுகாப்பில்லை. நேற்று இரவு விரலியூர் பகுதியில் யானை பூசாரி ஒருவரை தாக்கியுள்ளது. யானையை விரட்டும் முயற்சியில் இருவர் காயமடைந்ததில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். காலையில் யானை மேலும் மூவரை தாக்கியுள்ளது," என்றார்.



"வனத்துறையினர் இரவே யானையை விரட்டி இருந்தால் காலையில் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்காது. வனத்துறையினர் பெயரளவுக்கு செயல்படுகிறார்களே தவிர முறையான நடவடிக்கை எடுப்பதில்லை, அதற்காக நிதியும் ஒதுக்கப்படுவதில்லை," என்று அவர் குற்றம் சாட்டினார்.

வேலுமணி மேலும் கூறுகையில், "இன்றைக்கு ஒரு உயிர் போய்விட்டது, ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களுக்கு கை கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது. தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வருகிறோம்," என்றார்.



அகழி வெட்டினாலும் மின்வேலி அமைத்தாலும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் யானைகள் மீண்டும் வர ஆரம்பித்து விடும் என்றும் அவர் எச்சரித்தார். விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை என்றும், பயிர் சேதம் ஏற்படும் போது போதுமான நிவாரணம் அளிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

"யானை தொடர்ந்து அங்கேயே இருக்கின்றது. வனத்துறையினர் அங்கேயே இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை அந்த இடத்திற்கு பழகிவிட்டது எனவே உடனடியாக அந்த யானையை இங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்," என்று வேலுமணி வலியுறுத்தினார்.

வனத்துறையினரின் மெத்தனப் போக்கை கைவிட்டு மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...