தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து வெளியேறிய காட்டு யானை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே முத்திபாளையத்தில் காட்டு யானை ஒன்று வீட்டின் கேட்டை உடைத்து, காம்பவுண்ட் சுவரை இடித்து வெளியேறியது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள முத்திபாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. மேலும், அதே பகுதியில் யானையை விரட்ட முயன்ற இளைஞர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.



இந்நிலையில், ஜூலை 30 அன்று இரவு முத்திபாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று ஊரைச் சுற்றி உலா வந்தது. அப்போது ஒரு வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த யானை, வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி செல்ல முயன்றபோது, காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது.

இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்தக் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் காட்டு யானையை கண்காணித்து வருவதாகவும், அதனை அதன் வாழ்விடத்திற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், யானைகளை பார்த்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...