கோவை பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: ரூ.2.8 லட்சம் பறிமுதல்

கோவை பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 12 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சார் பதிவாளர் அருணா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2.8 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்களின் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. இங்கு சார்பதிவாளர்களாக அருணா மற்றும் ரமேஷ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.



இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவில் அதிக அளவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் அதிக அளவு லஞ்சம் வாங்குவதாகவும், புரோக்கர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில், சார்பதிவாளர் அருணா தன்னிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, எழிலரசி மற்றும் 5க்கும் மேற்பட்ட போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.

அதற்குள் சார் பதிவாளர் அருணா தனது காரில் கிளம்பியதால், போலீசார் அவரை பின்தொடர்ந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அவரது காரை மடக்கிப் பிடித்தனர். காரை சோதனை செய்தபோது ரூபாய் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பணம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சார்பதிவாளர் அருணாவை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அலுவலகத்தின் கதவுகளை அடைத்து விட்டு உள்ளே இருந்த பணியாளர்களை வெளியேறக் கூடாது என கூறி ஆவணங்களை சோதனை செய்தனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன்புற கேட்டுகளும் மூடப்பட்டு வெளி நபர்கள் உள்ளே வருவதும் தடுக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்று காலை 7 மணி அளவில் நிறைவுற்றது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் அருணாவை விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். சுமார் 12 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...