திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் - எஸ்.பி. வேலுமணி

கோவையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேட்டி. திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு வட்டியில்லா கடன், சாலைப் பணிகள், வீடு கட்டும் அனுமதிக் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.


கோவை: கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, அதிமுக ஆட்சிக் காலத்தில் நெசவாளர்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் கொண்டுவரப்பட்டதாகக் கூறி, நெசவாளர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் குறைவாக வாக்குகள் பெறப்பட்ட பூத்துகளை எப்படி சரி செய்வது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் கோவைக்குத் தேவையான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுத்ததாகவும், எனவே சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எடப்பாடி பழனிசாமி அறிவித்த ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும், மேலும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள சாலைகள் நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்ட 500 சாலைகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அரசு விரைவாக சாலைகளைச் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வீடு கட்ட அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருப்பதால் கோவை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரினார். சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும், இவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திருப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் வங்கதேசத்திற்குச் சென்றிருப்பதாகவும், தற்போது வங்கதேசத்தில் பெரும் பிரச்சனை நிலவி வருவதாகவும் கூறினார். "மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக தலையிட்டு திருப்பூருக்கு வட்டியில்லா கடன் வழங்கி ஜவுளி பனியன் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கான தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...