தமிழக சினிமாவில் பாலியல் புகார்கள் இல்லை; வந்தால் நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன்

திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தொடங்கி வைத்தார். கேரளா சினிமாவில் நடந்தது போல் தமிழகத்தில் பாலியல் புகார்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிறித்துராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார்.



இந்த வாகனங்கள் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திடவும் கால்நடைகளை நன்கு பராமரித்து மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அண்மையில் தமிழக முதல்வரால் 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியில் இருப்பர். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்பொழுது அங்கு பரபரப்பாகி வரும் சூழலில், தமிழகத்தில் தற்பொழுது வரை அது போன்று எந்தவித புகார் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து பேசிய அமைச்சர், "தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு தொழிற்சாலையும் வெளி மாநிலத்திற்கு செல்லவில்லை. தமிழகத்திலேயே தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து கூட தமிழகத்திற்கு வந்து தொழில் செய்கின்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியது மூலம் தொழில் தொடங்க ஆர்வமுடன் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...