கோவையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு 5 கி.மீ ஓட்டம்

கோவையில் தமிழ்நாடு சுயநிதி கல்லூரிகள் சங்கம் சார்பில் 'போதைப்பொருள் இல்லா வளாகம் 2024' என்ற தலைப்பில் 5 கி.மீ ஓட்டம் நடைபெற்றது. மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு முழக்கங்களுடன் ஓடினர்.


Coimbatore: கோவையில் தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம் சார்பாக, 'போதைப்பொருள் இல்லா வளாகம் 2024' என்ற தலைப்பில் 5 கி.மீ ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் போதைப்பொருட்களை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களுடன் ஓடினர்.

'போதைப்பொருள் வேண்டாம், வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள்' என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த ஓட்டம், ஆகஸ்ட் 31 சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு கோவை ரேஸ் கோர்ஸில் தொடங்கி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது. இந்நிகழ்வின் நோக்கம் போதைப்பொருள் இல்லாத வளாகத்தை மேம்படுத்துவதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதும் ஆகும்.



ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், செயலாளர் டி சேதுபதி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, IAS அவர்கள் கலந்து கொண்டு 5 கி.மீ ஓட்டத்தை துவக்கி வைத்தார்.



கௌரவ அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்டோர் அவினாசி சாலை வழியாக வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் வந்தடைந்தனர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கத்தின் செயலாளர் சேதுபதி, இளம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு இது போன்ற விழிப்புணர்வு தற்போது அவசியம் தேவைப்படுவதாக கூறினார். தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பரிசளிப்பு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கத்தலைவர் மற்றும் கோயம்புத்தூர் ஏஜேகே கல்விக் குழும நிறுவனங்களின் செயலர் பேராசிரியர் முனைவர் அஜீத் குமார் லால் மோகன் அவர்கள் தலைமை உரை வழங்கினார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். எஸ்என்எம்வி கல்லூரி முதல்வர் நன்றியுரை வழங்கினார்.



முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் முதல் இடம் மாரி சரத் K (அஜ்வா ஸ்போர்ட்ஸ் கிளப், ராஜபாளையம்), இரண்டாம் இடம் நவீன் V (டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி), மூன்றாம் இடம் வீரபத்ரன் P (ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்) ஆகியோர் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதல் இடம் சப்னா ஷெரின் M (ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்), இரண்டாம் இடம் கலையரசி (சுகுணா கலை அறிவியல் கல்லூரி), மூன்றாம் இடம் மகேஷ்வரி (தமிழ்நாடு காவல் துறை) ஆகியோர் பெற்றனர்.



முதல் 50 இடங்களில் வந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. சுமார் 80 கல்லூரிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 5 கி.மீ ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...