போதைப் பொருள் விற்பனை: ஹரியானாவில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கோவைக்கு கொண்டு வரப்பட்டார்

கோவையில் போதைப் பொருள் விற்பனை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டு, கோவைக்கு கொண்டு வரப்பட்டார். 20,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்து வந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் அரியானா மாநிலத்தில் வைத்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 20 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜூலை மாதம் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்த துணை நடிகைகள் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். விசாரணையில், அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் கார்க் (43) என்பவரிடம் இருந்து மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதும், விற்றதும் தெரிய வந்தது.

மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் தனிப்படை போலீசார் அரியானாவில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் விளைவாக, ஹரியானாவில் சச்சினை பிடித்து கைது செய்தனர். அங்குள்ள நீதிமன்றத்தில் சச்சினை ஆஜர்படுத்தி, கோவைக்கு நேற்று (செப்டம்பர் 6) அழைத்து வந்தனர். பின்னர், விசாரணையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சச்சினை அடைத்தனர்.

மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சச்சின் வலி நிவாரண மாத்திரைகளை பரிந்துரைச்சீட்டு இல்லாமல், போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்துள்ளார். இவரிடம் இருந்து 20 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர், மாத்திரைகளை கூரியர் மூலம் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார். 100 மாத்திரை கொண்ட அட்டையை ரூ.600க்கு வாங்கி அதை ரூ.3 ஆயிரத்து விற்றுள்ளார். இவரிடம் வாங்குபவர்கள் அதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்கின்றனர்," என்றார்.

மேலும் அவர், "போதை மாத்திரை புழக்கத்தை ஒழிக்க போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கஞ்சா, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 158 கிலோ கஞ்சா, 2,598 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இதுவரை 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 39 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...