'ஜிஎஸ்டி கோரிக்கைகளை கட்டாயம் பரிசீலிப்பேன்' - கோவையில் தொழில்துறையினருடன் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் உறுதி

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில்துறையினர் சந்திப்பில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிப்பதாகவும் உறுதியளித்தார்.


Coimbatore: கோவை கொடிசியா வளாகத்தில் இன்று காலை, பல்வேறு தொழில் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரி துறை, ஜி.எஸ்.டி, கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாலையில், சிறு குறு தொழில் முனைவோர், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர். கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.



தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மக்களின் குறைகளைக் கேட்பது அதிகாரிகளின் கடமை. அதிகாரிகளிடம் ஒரு வார்த்தை சொன்ன நிலையில் அதிகாரிகள் இன்று வந்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார். மேலும், ஜி.எஸ்டி, கஸ்டம்ஸ், வருமான வரித்துறை, MSME, IOB மற்றும் Canara வங்கி அதிகாரிகள் உட்பட பல துறை அதிகாρிகள் வந்திருப்பதாகவும், கொடுக்கப்பட்ட ஒவ்வொரு மனுவிற்கும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கோவைக்கு அடல் இன்னோவேசன் மிஷன், டிபன்ஸ் காரிடர் போன்றவை செயல்படுத்தப்படுவதாகவும், தொழில் வளர்ச்சிக்கு நல்ல அனுகூலமான மண்டலம் கோவை என்றும் அவர் குறிப்பிட்டார். சிட்பி வங்கியின் கோவை கிளை குறித்தும், அதன் கடன் வழங்கல் நிலை பற்றியும் விவரித்த அமைச்சர், மைக்ரோ தொழில்களுக்கு சிட்பி வங்கி கிளையில் கடன் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.



பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், வங்கிக் கடன்கள், முத்ரா வங்கி கடன் உயர்வு போன்றவற்றை பற்றியும் விளக்கினார். வேளாண்மைத் துறையில் காய்கறிகளைப் பாதுகாக்க உரிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதல்முறையாக வேலைக்கு வருபவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம் குறித்தும் தெரிவித்தார்.

இறுதியாக, "ஜிஎஸ்டி பற்றிய கோரிக்கைகளை கட்டாயம் பரிசீலிக்கிறேன். ஜிஎஸ்டி கவுன்சிலிலும் இது பற்றி சொல்கிறேன்" என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறையினர் மத்தியில் உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...