திருப்பூர் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது: 32 பவுன் நகை பறிமுதல்

திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை, தாராபுரம், காங்கயம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நான்கு முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். 32 பவுன் நகை, சொகுசு கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு முகமூடி கொள்ளையர்கள் உடுமலையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 32 பவுன் நகை, சொகுசு கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை, தாராபுரம், காங்கயம் காவல் சரக பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1 வரையிலான காலகட்டத்தில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து இச்சம்பவங்கள் அரங்கேறின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுதொடர்பாக உடுமலை மற்றும் காங்கேயம் காவல் நிலையங்களில் தலா 6 வழக்குகளும், தாராபுரம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.



போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 16 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, 45 பவுன் நகை, ரூ.3.22 லட்சம் பணம், 30 பட்டுப் புடவைகள், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல குத்துவிளக்குகள், 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் உத்தரவின்படி, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் ஆலோசனையின் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் வே.ஆறுமுகம் (உடுமலை), மாயவன் (காங்கயம்) தலைமையில், காவல் ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன் (உடுமலை), விவேகானந்தன் (காங்கயம்), சோமசுந்தரம் (அவினாசி), 4 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர், 4 தலைமைக் காவலர்கள் மற்றும் 6 காவலர்கள் இடம்பெற்றனர்.

சிறப்புக் குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி, சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற பாதைகளிலும் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று உடுமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட ராகல்பாவி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்புக் குழுவினர், சந்தேகத்திற்கிடமான முறையில் பதிலளித்த நான்கு நபர்களை விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணையில், இவர்கள் உடுமலை, காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் நடந்த தொடர் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதியானது.



இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (40), சுரேஷ் (34), தங்கராஜ் (55) மற்றும் சத்தீஸ்கர் மாநிலம் தீட்கரகோட்டை பகுதியில் வசித்துவந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த முருகன் சிவகுரு (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



இவர்கள் மீது திருப்பூர் மாவட்டத்தில் 19 வழக்குகள், திண்டுக்கல் மாவட்டத்தில் 5 வழக்குகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 வழக்கு என மொத்தம் 25 வழக்குகள் உள்ளன. இவற்றில் 97 பவுன் நகை, ரூ.8.71 லட்சம் பணம், 5 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.





இதில் 32 பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், முகமூடிகள், கையுறைகள், அரிவாள், சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை தொடர்கிறது.

கைதான ராஜா மற்றும் தங்கராஜ் மீது 19 வழக்குகளும், சுரேஷ் மீது 15 வழக்குகளும், முருகன் சிவகுரு மீது 20 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள், தொழில் முனைவோர், தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...