கோவை: பழங்குடிப் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம்

கோவை தொண்டாமுத்தூர் அருகே முள்ளாங்காட்டில் பழங்குடிப் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணம் என்று கூறப்பட்டது.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பழங்குடிகள் வாழும் கிராமம் முள்ளாங்காடு. இங்குள்ள பழங்குடியினப் பெண்கள் தினக்கூலிக்கு செல்வார்கள். மழைக் காலங்களில் அதுவும் இன்றி வீடுகளுக்குள் முடங்குவார்கள். இந்நிலையில், பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தன்னார்வலர்கள் பல்வேறு வேலை வாய்ப்பு, சுயதொழில் முன்னேற்றத்துக்கு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

கோவை சார்ந்த நேர்டு தொண்டு நிறுவனம் பழங்குடி மக்களின் நலன் சார்ந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது. முள்ளங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பழங்குடியினப் பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தையல் சுயதொழில் கற்றுத்தர திட்டமிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் முள்ளங்காடு பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், அப்பகுதி பழங்குடியினப் பெண்களுக்கு, இலவச தையல் பயிற்சி முகாம் நடத்தினர்.



இதில் பயிற்சி பெறும் பெண்களுக்கு தையல் இயந்திரம் தருவதோடு மட்டுமின்றி, சுயதொழில் செய்வதற்கான வங்கிக் கடன் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தர விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தனர். முள்ளங்காடு சமுதாயக் கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பழங்குடியினப் பெண்கள் இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று வந்த நிலையில், அப்பகுதிக்கு வந்த ஆலந்துறை போலீசார் பயிற்சி வகுப்பை தடுத்து நிறுத்தியதாக பழங்குடியினப் பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சமுதாயக் கூடத்தில் உள்ள மெசின்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் வற்புறுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அடிப்படையில் இந்த முகாமை நடத்தக்கூடாது என போலீஸ் தெரிவித்தனர் என காட்டமாகப் பேசிய பழங்குடியினப் பெண்கள், சட்டம் ஒழுங்கு பாதிப்பானது எதனால் ஏற்படுமென்ற கேள்விக்கு போலிசார் பதில் சொல்லவில்லை என தெரிவித்துள்ளனர்.

பொருளாதார முன்னேற்றத்துக்காக நடக்கும் இந்த முகாமுக்கும், தங்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டுமே என்ற வலியுறுத்தல்களுக்கும், போலீசார் செவி சாய்க்கவில்லை என பழங்குடியினக் கிராமப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொருளாதார முன்னேற்றம் இன்றி தவிக்கும் பழங்குடியினப் பெண்களுக்கு உதவிகள் செய்ய வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை போலீசார் தடுத்து நிறுத்துவது ஏன் என்ற கேள்வி எழுப்பி அவர்கள், போலிசாரும் எந்த உதவியும் செய்வதில்லை, தங்களுக்கு உதவி செய்ய வருபவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர் என பழங்குடியினப் பெண்கள் குமுறினர்.



பழங்குடியினப் பெண்களுக்கான பயிற்சி முகாமை நடத்துவதற்காக அரசாங்க அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றதாக தெரிவித்த ஒருங்கிணைப்பாளர்கள், போலீசார் பழங்குடிப் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி முகாமை தடுத்து நிறுத்திய பின்னணியில் சதித்திட்டம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். உயர் அதிகாரிகள் தலையிட்டு பழங்குடியினப் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகளை தடை இன்றி நடத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என தன்னார்வத் தொண்டு அமைப்பினர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...