தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு 'தமிழ்நாடு விஞ்ஞானிகள்' விருது

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விஞ்ஞானி விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நான்கு விஞ்ஞானிகள் 2018 முதல் 2021 வரையிலான ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெற்றனர்.


Coimbatore: தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் (TNSCST) 'தமிழ்நாடு விஞ்ஞானி' விருது வழங்கும் விழா செப்டம்பர் 23 ஆம் தேதி திங்கள்கிழமை சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு ஆய்வுப் பிரிவுகளில் விஞ்ஞானிகளின் தனிப்பட்ட ஆராய்ச்சிகள், ஆய்வு முடிவுகளின் செயல்பாட்டு வெளியீடுகள் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார். இந்த விழாவிற்கு உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த.பிரதீப் யாதவ், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஆணையர் டி.ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜே.பிரகாஷ், சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் முனைவர் எஸ்.வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு விஞ்ஞானிகள் பல்வேறு துறைகளின் கீழ் விருதுகளைப் பெற்றுள்ளனர். முனைவர் பி. ஜெயகுமார், இயக்குநர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு) அவர்கள் பயிர் மேலாண்மையில் வினையியல் அணுகுமுறைகள் பகுதியில் ஆற்றிய பங்களிப்பின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டிற்கான விருதையும், முனைவர் உ.சிவகுமார், பேராசிரியர் மற்றும் தலைவர் (வேளாண் நுண்ணுயிரியல்) அவர்கள் உயிர் வினையூக்கி, செல் புரதங்கள், புரத உருவாக்க முறைகள் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக 2019 ஆம் ஆண்டிற்கான விருதையும் பெற்றனர்.

முனைவர் ஜி. கார்த்திகேயன், பேராசிரியர் (தாவர நோயியல்) அவர்கள் வைரஸ் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சிக்காக 2020 ஆம் ஆண்டிற்கான விருதையும், முனைவர் கே.டி. பார்த்திபன் பேராசிரியர் (வனவியல்) அவர்கள் மரங்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில் துறையில் மேற்கொண்ட "இந்தியாவில் காடுகளுக்கு வெளியே மரங்கள் வளர்ப்பு" என்ற தலைப்பிலான ஆய்விற்காக 2021 ஆம் ஆண்டிற்கான விருதையும் பெற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள், விருதுகள் பெற்ற விஞ்ஞானிகளை, பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இர. தமிழ் வேந்தன் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் பாராட்டினார். மேலும், அவர் பல்கலைக்கழகம் மற்றும் விவசாய மக்கள் பெருமளவில் பயன்பெறும் வகையில், அனைவரும் பல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...