வால்பாறை சாலையில் கார் விபத்தில் சிக்கிய கொள்ளையன் கைது: திருடிய கார், பணம் மற்றும் நகைகள் மீட்பு

கோவை பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த சாலமன் என்ற உமேஷ் குமார், திருடிய காரில் வால்பாறை செல்லும் வழியில் விபத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார். திருடிய பொருட்கள் மீட்கப்பட்டன.


கோவை: கோவை பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த பிறகு தப்பி ஓடிய கொள்ளையன், வால்பாறை செல்லும் சாலையில் கார் விபத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சாலமன் என்கிற உமேஷ் குமார் (27) என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை பீளமேட்டில் வெளியூர் சென்றிருந்த தொழிலதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு, வாசலில் நிறுத்தி இருந்த காரையும் திருடிக் கொண்டு தப்பினார்.

இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், செப்டம்பர் 28 அன்று வால்பாறை செல்லும் வழியில் ஒரு வளைவில் திரும்பும்போது கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய நபர் பீளமேடு கொள்ளை வழக்கில் தொடர்புடைய சாலமன் என்பது தெரியவந்தது.



விபத்தில் சாலமனுக்கு கை முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலமனை கைது செய்தனர். சேதமடைந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சாலமனிடமிருந்து மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.1,20,000 ரொக்கப்பணம், மற்றும் 5 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன. காயமடைந்த சாலமன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலமன் மீது உள்ள மற்ற வழக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...