'தி.மு.க.வில் பொறுப்பிற்கும் தலைமைக்கும் வாரிசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை காட்டியுள்ளனர்' - வானதி சீனிவாசன்

கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் 'பிரதமரின் மனதின் குரல்' நிகழ்ச்சியைக் கண்ட பின் வானதி சீனிவாசன் தி.மு.க.வின் வாரிசு அரசியலை விமர்சித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதை சாடினார்.


Coimbatore: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின் வீட்டில் "பிரதமரின் மனதின் குரல்" நிகழ்ச்சியை கட்சியினருடன் சேர்ந்து பார்த்த பின்னர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது: "தி.மு.க.வில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்கிற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது தி.மு.க.வின் வாரிசு அரசியலையே காட்டுகிறது. தி.மு.க.வில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்து இருந்தாலும் அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை தி.மு.க பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது."



வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், "மாற்றி அமைக்கப்பட்டு உள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும். ஊழல் செய்த ஒருவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவதும், அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்களை வைத்துக் கொண்டு நேர்மையான ஆட்சி வழங்குவோம் என முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் கூறுவதையும் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் என பேசும் தி.மு.க அரசு, அமைச்சரவையில் பட்டியலின மக்களின் சார்பாக எந்த பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. முக்கிய துறைகள் எதுவும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கப்படவில்லை," என விமர்சித்தார்.



"கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும் மத்திய அமைச்சராகவும் முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தான் செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வின் இந்த வாரிசு அரசியல் குறித்து பா.ஜ.க தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...