கோவையில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அம்மன் அர்ஜுனன் MLA தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான அம்மன் அர்ஜுனன் தலைமை தாங்கினார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இந்த போராட்டம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



போராட்டக்காரர்கள் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். உடனடியாக சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இப்போராட்டத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், "விடியலை தருகிறேன் என்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு மட்டும் விடியலை தந்திருக்கிறார். இந்த ஐந்து ஆண்டுகள் எப்போது முடியும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.



மேலும் அவர், "அதிமுக ஆட்சி ஏழை எளிய மக்களுக்காகவே நடத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் பணக்காரர்கள் கூட வாழ முடியாது. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு செல்கின்றன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையில், தற்போது பஞ்சாலைகளை பார்க்கவே முடியவில்லை. அடுத்த தலைமுறையினருக்கு பஞ்சாலை உபகரணங்களை கண்காட்சியில் வைத்து தான் காட்ட வேண்டிய சூழல் கோவைக்கு வந்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக, "2026 ஆம் ஆண்டு யார் தடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மலரும்" என்று அம்மன் அர்ஜுனன் உறுதிபட தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...