கோவை: திமுக பஞ்சாலைத் தொழிலாளர் சங்கச் சொத்துக்களை திருப்பூர் துரைசாமி அபகரிப்பதாக குற்றச்சாட்டு

கோவையில் திமுக பஞ்சாலைத் தொழிலாளர் சங்கச் சொத்துக்களை திருப்பூர் துரைசாமி அபகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சங்கச் சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.


கோவை: கோவை பெரியார் மாவட்டத் திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சொத்துக்களை திருப்பூர் துரைசாமி அபகரிக்க முயற்சிப்பதாகவும், சில சொத்துக்களை விற்பனை செய்திருப்பதாகவும் திமுக தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் அருள்மொழி உள்ளிட்டோர் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

திமுக தரப்பின் பார்த்தசாரதி கூறுகையில், கோவை பெரியார் மாவட்டத் திராவிடப் பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் திருப்பூர் துரைசாமிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ததாகவும் மேல்முறையீடு வழக்கில் மீண்டும் திருப்பூர் துரைசாமிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினார். மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி சங்கத்தின் தேர்தல் முறை தவறானது என சுட்டிக் காட்டியதாக கூறிய பார்த்தசாரதி, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறினார்.

பார்த்தசாரதி மேலும் கூறுகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு, தான் உட்பட 5 பேர் மீது சங்கத்தின் பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாக வழக்கு தொடரப்பட்டதாகவும் அந்த வழக்கு விசாரணை தற்போது JM2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

46 இடங்களில் சங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் இருப்பதாகவும் அதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறினார். சங்கம் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தபோது, சங்கச் சொத்துக்களை விற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததாக கூறிய அவர், இந்நிலையில், சங்கத்தின் சொத்துக்களை திருப்பூர் துரைசாமி அபகரிக்க முயற்சிப்பதாகவும் சங்கத்திற்கு சொந்தமான நான்கு சொத்துக்களை, சந்தை மதிப்பைவிட குறைவான விலைக்கு திருப்பூர் துரைசாமி கிரயம் செய்திருப்பதாகவும் விற்பனை செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இது துரைசாமியின் சொத்து இல்லை, திமுக தொண்டர்கள் கொடுத்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்து என்று கூறிய அவர், திருப்பூர் துரைசாமி, தனது தவற்றை முதலமைச்சரிடம் கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் அருள்மொழி கூறுகையில், சங்கத்தின் பொதுச் செயலாளர் என்று பார்த்தசாரதி வழக்கு நடத்தி வருவதாகவும் அதே போன்று சங்கத்தின் பொதுச் செயலாளர் என்று துரைசாமியும் வழக்கு நடத்தி வருவதாகவும் கூறிய அவர், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சங்கத்திற்கு சொந்தமான நான்கு சொத்துக்கள், சந்தை மதிப்பைவிட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். தற்போது திருப்பூர் துரைசாமி, எந்த கட்சியிலும் இல்லை என்றும் எனவே சங்கத்தின் சொத்துக்களை திமுக தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...