உடுமலை அருகே இடிமின்னலுடன் கனமழை: வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கி 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உரல்பட்டி கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கி 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆண்டிய கவுண்டர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி (52) என்பவரின் சிமெண்ட் மேற்கூரை வீட்டின் மீது இரவு 11 மணி அளவில் மின்னல் தாக்கியது.



இந்த சம்பவத்தில், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், வாஷிங் மெஷின், தொலைக்காட்சி மற்றும் ரொக்கம் 10,000 ரூபாய் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. சுப்பிரமணி வெளியூர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி வள்ளிநாயகம் (45) தனது மகள் மற்றும் குழந்தையுடன் அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.



சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து வள்ளிநாயகம் கூறுகையில், "நேற்று இடைவிடாமல் கனமழை பெய்து வந்தது. இரவு 11 மணி அளவில் பலத்த சத்தம் கேட்டது. உடனே வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டோம். அருகில் இருந்த பொதுமக்கள் வீடு தீப்பிடித்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்த பிறகுதான் வீட்டின் மீது மின்னல் தாக்கியதால் மின்விபத்து ஏற்பட்டு அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது தெரிய வந்தது. தற்போது சமையல் செய்வதற்குக் கூட பொருட்கள் எதுவும் இல்லை. எனவே, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...