கோவை: அபார்ட்மெண்ட் குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலப்பு - குடியிருப்பாளர்கள் அவதி

கோவை கள்ளிமடையில் உள்ள அபார்ட்மெண்ட்டின் குடிநீர் தொட்டியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் குடியிருப்பாளர்கள் பாதிப்பு. அருகிலுள்ள வில்லா நிர்வாகத்தின் செயல்பாடு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிமடையில் உள்ள ஆகாஷ் வில்லா மற்றும் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அபார்ட்மெண்ட்டின் குடிநீர் தொட்டியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வில்லா மற்றும் அபார்ட்மெண்ட்டுக்கு இடையே பொதுவான கழிவுநீர் குழாய் உள்ளது. வில்லா சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகராட்சி கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வில்லா அசோசியேஷன் நிர்வாகிகள் கழிவுநீர் செல்லும் வழியை அடைத்துவிட்டனர். இதனால் மழைநீர், கழிவுநீர் அனைத்தும் அபார்ட்மெண்ட்டுக்குள் புகுந்து, 4,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியில் கலந்தது.



இதனால் குடிநீர் மாசுபட்டுள்ளதாக அபார்ட்மெண்ட் அசோசியேஷன் தலைவர் கண்ணன் தெரிவித்தார். குடிப்பதற்கு வெளியிலிருந்து தண்ணீர் கேன்கள் வாங்கி குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வாந்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற அச்சத்தில் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...