தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டார். மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்தும் கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பள்ளி கல்வித்துறை சார்பில் 2024 - 2025 கல்வியாண்டு 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொது தேர்வு அட்டவணைகளை வெளியிட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், மழை எச்சரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி விடுமுறை குறித்த தகவலை தெரிவிப்பார்கள் என்றார். மேலும், தேர்வு அட்டவணை வெளியீட்டிற்குப் பிறகு மாணவர்கள் பதற்றமின்றி சரியான திட்டமிடலை கையாள வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை பல்வேறு காரணங்கள் கூறி மத்திய அரசு நிறுத்தி விடக்கூடாது. முழுமையாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலத்தை, இந்தந்த கொள்கைகளை சேர்த்துக் கொண்டால் மட்டும்தான் நிதி அளிப்போம் என்பது எந்த விதத்தில் நியாயம்?" என்ற கேள்வியை எழுப்பினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் பள்ளி கல்வித்துறைக்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்து வருவதாகவும் கூறினார்.

சிதிலமடைந்த பள்ளிகள் குறித்து பேசிய அமைச்சர், "பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு 7500 கோடி ஒதுக்கீடு செய்து, 18,000க்கும் மேற்பட்ட வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் கட்டுவதென தீர்மானம் செய்துள்ளோம். இதுவரை கிட்டத்தட்ட 3500 வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் சார்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.



CBSE பள்ளிகளில் கட்டணம் நிர்ணயிப்பது குறித்து பேசிய அமைச்சர், "கட்டுமானத்தின் அடிப்படையில்தான் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகிறோம். CBSE பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பெறும் வகையில், மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என்றார்.

கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கவனிப்புடன் வகுப்புகள் நடத்தப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...