பொள்ளாச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்றம்

பொள்ளாச்சி அருகே 10 நெம்பர் முத்தூரில் சமுதாய நல்லிணக்கம், பெண்கள் உடல்நலம் மற்றும் பாரம்பரிய கலையை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள 10 நெம்பர் முத்தூரில் காராள வம்ச கலை சங்கம் குழு சார்பில் பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பெண்கள் உடல் நலம் பேணிக்காக்கவும் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் முருகபெருமாள், வள்ளி திருமணம் போன்ற பாரம்பரிய கதைகளை நினைவு கூறும் வகையில் வள்ளி கும்மி நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் நித்தியானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொள்ளாச்சி பகுதியில் காராள வம்ச கலைச்சங்கம் சார்பில் 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் உடல்நலம், மனநலம் பேணி காக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு பயிற்சி எடுத்தவர்கள் உடலில் இருந்த குறைபாடுகள் நீங்கியுள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்," என்றார்.

மேலும் அவர், "நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கின்ற வகையில் விளங்கும் வள்ளிக்கும்மியை மீட்டெடுத்து ஒரே இடத்தில் பதினாறாயிரம் பேரை அரங்கேற்றம் செய்து உலக சாதனை படைத்தனர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டினருக்கும் இந்த பயிற்சி சென்று கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடு இல்லாமலும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த வள்ளி கும்மியை கற்று வருகின்றனர்," என்று தெரிவித்தார்.

"அரசியல் ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு சமுதாய நல்லிணக்கத்திற்கு ஒரு வழியாக வள்ளி கும்மி மாறிக் கொண்டிருக்கிறது," என்று நித்தியானந்தன் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...