துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனையில் 100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தியிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் நவீன டெசிபல் அளவீட்டு கருவி மூலம் ஒலி அளவு பரிசோதிக்கப்பட்டு, 100 டெசிபலுக்கு மேல் இருந்த ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும், மக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக சாலைகளில் செல்ல உதவவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தியுள்ள வாகனங்கள், கண்கள் கூசும் LED விளக்குகள் பொருத்தியுள்ள வாகனங்கள் உள்ளிட்டவை நவீன கருவிகள் மூலம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மேற்கு மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெரியசாமி, கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் துடியலூர் பகுதியில் அதிரடி வாகனச் சோதனை நடத்தப்பட்டது. சாலையில் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஹாரன்களை அடித்து நவீன டெசிபல் அளவீட்டு கருவி மூலம் ஒலி அளவை பரிசோதித்தனர்.



100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பிய 10க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், லாரிகள் ஆகியவற்றில் இருந்து ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் கண்கள் கூசும் அளவுக்கு LED விளக்குகள் பொருத்தியிருந்த வாகனங்களில் இருந்து விளக்குகளும், பம்பர் பொருத்தியிருந்த வாகனங்களில் பம்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களை வே பிரிட்ஜ் மூலம் எடை போட்டு பரிசோதித்து, அதிக எடை ஏற்றி வந்த வாகனங்களுக்கு கூடுதலாக உள்ள ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், துரை, பிரேம்குமார் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளை தடுக்கவும் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...