கோவை, நவம்பர். 12:
கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). துடியலூர் பகுதியில் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12.75 லட்சம் பணம் காணாமல் போனதாக கடந்த வாரம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆறுமுகம் செல்போன் சிம்கார்டு வேலை செய்யவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். அப்போது அந்த சிம்கார்டு வேறு ஒரு நபர் உபயோகித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.
அதே நேரத்தில், சிம்கார்டினை கொண்டு வங்கிக்கணக்கை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள் அதில் இருந்து இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள இரு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது ஆறுமுகம் வங்கிக்கணக்கில் இருந்து இரு வேறு வங்கிக்கணக்கிற்கு பணத்தினை 'ஆர்.டி.ஜி.எஸ்' இணையவழி பண பரிமாற்றம் மூலமாக கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும், சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கு வடமாநிலத்தை சேர்ந்ததாக தெரியவந்துள்ளது, என்று கூறினார்.
இந்த நிலையில், சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கு யாருக்கு சொந்தமானது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12.75 லட்சம் கொள்ளை போன சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.