'உள்ளாட்சி அமைப்புகளில் சாதிய அநீதிகளை தடுக்க வேண்டும்..!' - எம்.பி ரஞ்சன் குமார் அறிக்கை

உள்ளாட்சி அமைப்புகளில் சில சாதிய சக்திகளால் நடத்தப்படுகிற அநீதிகளை இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஒடுக்க வேண்டுமெனக் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு மாநில தலைவர் வேண்டுகோள்.



கோவை: உள்ளாட்சி அமைப்புகளில் தலித் பிரிவினர் சுந்தரமாகச் செயல்பட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு மாநில தலைவர் எம்.பி ரஞ்சன் குமார் முதல்வருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு மாநில தலைவர் எம்.பி ரஞ்சன் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிராம பஞ்சாயத்துச் சட்டம் மூலம் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என மூன்றடுக்குகள் கொண்டதாகத் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு நிகரான ஓர் அங்கீகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளின் விளைவாக அவரது கனவை நிறைவேற்ற, அவரது மறைவிற்குப் பிறகு 1993ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் 73ஆவது பஞ்சாயத்து ராஜ் அரசமைப்புச் சட்டத் திருத்தமாகும்.

அதனடிப்படையில் தமிழக ஊராட்சிகள் சட்டம் 1994இல் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பட்டியலின, பழங்குடி மக்களுக்கென மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதோடு, மொத்த பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது மிகுந்த புரட்சிகரமான திட்டமாகும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் போது மொத்தமுள்ள 1 லட்சத்து 32 ஆயிரத்து 456 பதவியிடங்களுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்த ஒதுக்கீட்டின்படி பட்டியலின மக்கள் பொறுப்பேற்றுக் கொண்டாலும் அதில் செயல்படுவதற்கு பல்வேறு தடைகளை சில சாதிய சக்திகள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 15 மாவட்டங்களில் 21 தலித் பிரதிநிதிகள் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் செயல்பட முடியாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரக்கோணம், தென்காசி பகுதிகளில் நடைபெற்றது மிகுந்த வேதனைக்குரியது.

குறிப்பாக அரக்கோணம் பகுதியில் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீதா என்பவரைச் செயல்பட விடாமல் துணைத் தலைவர் நடந்து கொண்டது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. அதேபோல, தென்காசி பகுதியில் முதுமலை பஞ்சாயத்துத் தலைவர் வளர்மதி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சம்பவங்கள் தேனி, மதுரை, சிவகங்கை, திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரைத் தந்தை பெரியார்,காமராஜர் பிறந்த மண்ணில் பஞ்சாயத்து அமைப்புகளில் தலித்துகள் பதவியேற்றுச் செயல்படுவதற்கு இருக்கிற தடைகளைக் களைவதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அரசியல் சட்டத்தை நாட்டிற்கு வழங்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாக அறிவித்து அவருக்கு மணிமண்டபத்தில் முழு திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதேபோல, தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தவர் என்பதை எவரும் மறந்திட இயலாது.

2006 ஆம் ஆண்டு முதலமைச்சராகக் கலைஞர் பொறுப்பேற்ற போது துணை முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அப்போது தமிழ்நாடு பஞ்சாயத்து இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 2006 இல் நிறைவேற்றி பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தார்.

அத்திருத்தத்தின் அடிப்படையில் தான் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து நாட்டார் மங்கலம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டாகச்சியேந்தல் ஆகிய நான்கு ஊர்களில் தேர்தலை நடத்தி தலைவர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியலின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தவர் இன்றைய முதலமைச்சர். அதுமட்டுமல்லாமல், சென்னை கலைவாணர் அரங்கில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் தலைமையில் விழா நடத்திப் பதவியேற்பு விழா நடத்தியவரும் நமது முதலமைச்சர் தான்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதின விழா, குடியரசு தின விழா போன்ற நாள்களில் கிராமசபைகள் நடத்துவதைக் கட்டாயமாக்கி இன்றைக்கு அது நடைபெற்று வருகிறது. அத்தகைய விழாக்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிற உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

அத்தகைய சூழல் தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டு பட்டியலின மக்களின் பாதுகாவலராகச் செயல்படுவதோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவராகச் செயல்பட்டு மத, சமூக நல்லிணக்கத்தைத் தமிழக முதலமைச்சர் அவர்கள் பாதுகாத்து வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் நடக்கிற தலித் விரோத நடவடிக்கைகளைக் குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் சில சாதிய சக்திகளால் நடத்தப்படுகிற அநீதிகளை இரும்புக்கரம் கொண்டு தமிழக முதலமைச்சர் ஒடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...