கோவை சூலூரில் சூறைக் காற்றில் வாழை மரங்கள் சேதம் - மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு!

சூலூர் அடுத்த ஜே.கிருஷ்ணாபுரம் பகுதியில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த நிலையில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைமரங்கள் குறித்து சூலூர் எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி மற்றும் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டத்துக்குட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், வஞ்சிபுரம், வங்கப்பாளையம், மூலனூர், சேத்தம்பள்ளி, சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேல் தேனி நேந்திரன் மற்றும் கதளி ரக வாழை மரங்கள் பயிரிட்டுள்ளனர்.



இதில் 150 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீசிய சூறாவளி காற்றில் சிக்கி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் குலைகளோடு சாய்ந்து சேதமடைந்தன.

ஒரு ஏக்கருக்கு ஆயிரம் வாழைக்கன்றுகள் வீதம் பயிரிடப்பட்டு இருந்த நிலையில் 150 ஏக்கருக்கு ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு ஏக்கர் வாழை பயிரிட ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவடை நேரத்தில் வாழை சேதம் அடைந்துள்ளதால் ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

தேன் நேந்திர வாழை தற்போது கிலோ 28 ரூபாய்க்கும் கதளி வாழை கிலோ 30 ரூபாய்க்கும் தற்பொழுது விவசாயி இடம் வாங்கப்பட்டு வரும் நிலையில் சேதம் அடைந்த வாழை மரங்களை மாவட்ட நிர்வாகம் முறையாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



இந்த நிலையில், இன்று சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி கந்தசாமி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கோவிந்தசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் சூறாவளி காற்றால் ஏற்பட்ட சேதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும் சூலூர் பகுதியில் எத்தனை வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளை தொடர்ந்து சூலூர் வட்டத்துக்குட்பட்ட ஜே. கிருஷ்ணாபுரம் பகுதிகளிலும் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்பு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும், காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க தமிழக அரசிடம் பரிந்துரை செய்யப்படும். அதே போன்று கோவை மாவட்டம் முழுவதும் 34 குளங்களில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...