அமித்ஷா- ஈபிஎஸ் சந்திப்பால் முடிவுக்கு வந்த அதிமுக பாஜக பனிப்போர்?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதன்மூலம், தமிழகத்தில் அதிமுக-பாஜக இடையே இருந்துவந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொள்ளாச்சி: தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பிரச்சனை வெடித்தது.

அதில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், அதை தேர்தல் ஆணையமும் உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை இரண்டும் எடப்பாடி பழனிசாமி வசமானது.

இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுக கோரிவந்தது. ஆனால், பாஜக தனி வேட்பாளர் பட்டியலை அறிவித்ததைத் தொடர்ந்து, புலிகேசி தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதாக அதிமுக அறிவித்தது. புலிகேசி தொகுதியில் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.



இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில், நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அதிமுக பாஜக கூட்டணி குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை வகிப்பது எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்மூலம், தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிமுக-பாஜக இடையே நிலவிவந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களைத் தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துகொள்வோம் என்றார். ஓ.பி.எஸ் இன்னும் திமுகவின் பி-டீமாகத்தான் இருந்துவருகிறார் என்று குற்றம்சாட்டிய அவர், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சுதந்திரமாகச் செயல்படும் கட்சிகள் எனவும், திமுகவைப் போல் அடிமைக் கட்சி அல்ல என்றும் தெரிவித்தார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து உண்மைத்தன்மையை கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...