பல்லடத்தில் உலா வரும் டவுசர் கொள்ளையர்களை பிடிக்க கோரி டி.எஸ்.பி-யிடம் பொதுமக்கள் மனு!

கொசவம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் டவுசர் மட்டும் அணிந்த மூவர் தங்கள் உடலில் கிரீஸ் பூசிக்கொண்டு வீடுகளை நோட்டமிட்டவாறு உலா வந்த சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை பிடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடத்தில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் டவுசர் கொள்ளையர்களை பிடிக்க கோரி கொசவம்பாளையம் பகுதி மக்கள் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பல்லடம் அருகே கொசவம்பாளையம் சாலை, டி.எம்.எஸ். கார்டன், சின்னையா கார்டன் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் உடல் முழுவதும் கிரீஸ் பூசிக்கொண்டு ட்ரவுசர் மட்டும் அணிந்து கொண்டு மூன்று கொள்ளையர்கள் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டபடி உலா வந்துள்ளனர்.



இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பல்லடம் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.



இந்நிலையில் கொசவம்பாளையம் சாலை, டி.எம்.எஸ். கார்டன், சின்னையா கார்டன் ஆகிய பகுதி மக்கள் இன்று பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியாவை, நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் உடலில் வழவழப்பான திரவத்தை தடவிக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நோக்கில் உலாவரும் டவுசர் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது அதிர்ச்சியாகவும், உயிருக்கு அச்சுறுத்தும் விதமாகவும் உள்ளது,

இதே பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். தற்போது கொலை, கொள்ளை முயற்சிகளை தடுக்கவும், வீட்டில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் தனியாக இருப்பதால் அவர்களுக்கு பாதுகாக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். துரித நடவடிக்கை மேற்கொண்டு டவுசர் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

அப்போது அவர்களிடம், ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், விரைவில் டவுசர் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் எனவும் கோடை காலம் என்பதால் வெளியூருக்கு செல்லும்போது காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு டி.எஸ்.பி சௌமியா பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

பல்லடம் பகுதி மக்களிடையே பீதியை கிளப்பும் வகையில் இரவில் பயங்கர ஆயுதங்களுடன் உலா வரும் டவுசர் கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...