மானியக் கடன் வழங்குவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி: காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வர் மீது புகார்

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு மானியக் கடன் வழங்குவதாகக் கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் உள்ள தெற்கத்தியானூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், வள்ளலார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான பயிர் உற்பத்தி மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் சங்கத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சுனில் குமார் மற்றும் சங்கர் என்ற இருவர் கோவிந்தராஜிடம், தங்களது GRANDEE ADLER PETROCHEMICALS PRIVATE LIMITED நிறுவனம் மூலம் அவரது நிறுவனத்திற்கு 20 கோடி வரை நிதி வழங்க உள்ளதாகக் கூறி, கோவையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர்.

கோவிந்தராஜ் தன்னுடன் கந்தசாமி மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கோவைக்கு வந்து சுனில் குமார் மற்றும் சங்கரை சந்தித்துள்ளார். அவர்கள் அமைச்சர் முத்துசாமியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, அரசின் உதவியுடன் பல்வேறு சங்கங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி வருவதாகக் கூறியுள்ளனர்.

கடன் பெற முன் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று கூறியதை நம்பி, கோவிந்தராஜ் வங்கி கணக்கில் இருந்து 50 லட்சமும் ரொக்கமாக 30 லட்சமும் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள், ரொக்கமாக 10 கோடி, காசோலையாக 10 கோடி என மொத்தம் 20 கோடி ரூபாயை நேரில் வந்து பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.

கடந்த மே 13 ஆம் தேதி, கோவிந்தராஜ் தரப்பினர் ஊட்டி, கூடலூர் பஸ் நிலையத்திற்குச் சென்றபோது, மணி என்பவர் காரில் வந்து 10 கோடி ரூபாய் பணத்தையும் 10 கோடி ரூபாய்க்கான காசோலையையும் காண்பித்து, அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் வழியாக சேலம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது குன்னூர் காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் சிவக்குமார் ஆகியோர் கோவிந்தராஜ் தரப்பினரை குன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில், ஆய்வாளர் சதீஸ் பணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, கோவிந்தராஜ் மானியத்துடன் கூடிய கடன் பெறுவதாகக் கூறியுள்ளார். பின்னர் சுனில் குமார் மற்றும் சங்கர் வந்து ஆய்வாளருடன் தனியாகப் பேசிய பிறகு, கோவிந்தராஜ் தரப்பினரை வழக்குப் போடுவதாக மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.

இதனையடுத்து, தாம் மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்த கோவிந்தராஜ் தரப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சுனில் குமார், சங்கர், குன்னூர் காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் சிவக்குமார் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தும், போலி வழக்குகளில் கைது செய்து விடுவதாக மிரட்டியும், 80 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...