தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாம் நிறைவு : பிரியாவிடை பெற்ற யானைகள்

வெளிநாட்டினரையும் கவர்ந்திழுத்த கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடந்த யானைகள் நலவாழ்வு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.

கோவை கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடந்த யானைகள் நலவாழ்வு முகாம் நிறைவடைந்ததால், அலங்கரிக்கப்பட்ட யானைகள் லாரிகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பத்தாவது யானைகள் நலவாழ்வு முகாம் கடந்த மாதம் நான்காம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 31 யானைகளும் புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்றுள்ள இந்த முகாம் வரும் இன்றுடன் நிறைவடைந்தது. 

பத்து வயதாகும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜெயமால்யா யானை முதல் ஐம்பது வயதை கடந்த பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் யானை கஸ்தூரி வரை இம்முகாமில் பங்கேற்றுள்ளன. அரசு ஒதுக்கியுள்ள ரூ. 1.51 கோடி நிதியில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் இம்முகாம் அமைக்கப்பட்டு, இங்கு யானைகள் மற்றும் அதன் பாகன்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்பதோடு யானைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தனிகவனம் செலுத்தப்பட்டது. யானைகள் அதன் வயதைப் பொறுத்து 2.75 டன் முதல் 3.75 டன் வரை இருக்கலாம் என்னும் நிலையில், சில கோவில் யானைகள் குறைந்த எடையுடனும் சில கோவில் யானைகள் கூடுதல் எடையுடனும் இருந்தன.



இதற்கு ஏற்றாற்போல் முகாமில் உள்ள யானைகளுக்கு உணவுகளும், தினசரி இருவேளை பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயிற்சி மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன. யானைகளுக்கு அரிசி, கொள்ளு, கேழ்வரகு, பாசிப்பயிறு, அவல் மற்றும் அவற்றுக்கு விருப்பமான கூந்தப்பனை, புல் வகைகள், கரும்பு சோகை, சோளத்தட்டு, கீரை வகைகள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள், தேங்காய், வெல்லம், கருப்பட்டி, ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசி, பேரிச்சை போன்ற பழவகைகளும், உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு ஊட்டசத்து மருந்துகளும் தினசரி இருமுறை வழங்கப்பட்டன.

மேலும், கால்நடை மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு யானைகளின் பார்வை குறைபாடு, பாத வெடிப்பு, குடல் புழுக்கள், உடலில் உள்ள கொப்பளங்கள் போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. யானை பாகன்களுக்கும் தனியாக அரசு மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு உடல் பரிசோதனை, நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் உடல்நலம் மேம்பட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. யானைகள் குளிப்பதற்கு பிரத்யேகமான ஷவர் பாத் ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி இருமுறை யானைகள் குளிக்க வைக்கப்பட்டன.



இயற்கை சூழலில் கூட்டமாய் வாழும் இயல்புடைய யானைகள், அவை வளர்க்கப்படும் கோவில்களில் இதுவரை தனித்திருந்த நிலையில், முகாமில் தன் இனத்தை சேர்ந்த பிற யானைகளோடு கூட்டமாக ஒரே இடத்தில் வனம் சார்ந்த பகுதியில் தங்கியுள்ள காரணத்தால், அவையனைத்தும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டன என்றும், இதனால், இம்முகாமில் யானைகளின் உடல் நலம் மட்டுமின்றி அவற்றின் மனநலமும் மேம்பட்டுள்ளதாக உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர் இதன் பாகன்கள். 

ஒரே இடத்தில் இத்தனை யானைகளை காணவும், முகாமில் மௌத் ஆர்கன் இசைக்கும் யானை, கம்பு சுழற்றும் யானை, மணியோசை எழுப்பும் யானை மற்றும் குறிப்பாக, தலை நிறைய முடியுடன் பாப் கட்டிங் அடித்து அழகாய் காட்சியளிக்கும் யானை என பல்வேறு திறமையும், அழகும் மிக்க யானைகளை கண்டு ரசிக்க முகாமிற்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்தபடி இருந்தனர். இதுதவிர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முகாம் யானைகளை காண ஆர்வமுடன் வந்திருந்தனர். 

ஆப்பிரிக்க இன யானைகளை மட்டுமே இதுவரை பார்த்திருந்த கென்யா, தான்சான்னியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க கண்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா குழுவினர், ஆசிய யானைகளை காணவும் அவை இங்கு பராமரிக்கப்படும் முறை குறித்து அறியவும் வருகை தந்தனர். யானைகளை இதுவரை பலர் நேரில் கண்டிராத உலகில் தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வகை யானைகளே உள்ளன. குளிர்பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மாமூத் வகை யானைகள் இனம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டன. யானைகளே இல்லாத நாடான ரஷ்ய நாட்டின் சுற்றுலா குழுவினரும் முகாமிற்கு வந்திருந்து நிலத்தில் வாழும் பிரம்மாண்ட உயிரினமான யானைகளை கண்டு வியந்தனர்.



வெகு உற்சாகமாய் நடைபெற்ற யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று நிறைவு நாளை எட்டியது. இதையொட்டி, அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, யானைகளுக்கு பழங்கள் கொடுத்து முகாமினை முடித்து வைத்தார். பின்னர், அலங்கரிக்கப்பட்ட யானைகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு பழம், கரும்பு உள்ளிட்டவற்றை கொடுத்து லாரிகள் மூலம் யானைகள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நாற்பத்தெட்டு நாட்களுக்குப் பின்னர் சொந்த ஊர் செல்லும் மகிழ்ச்சி யானைகளிடமோ, அதன் பாகன்களிடமோ இல்லாமல் அனைவரும் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற ஒருவித சோகமே முகாமில் நிலவியது. ஆண்டுதோறும் இம்முகாம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், அரசியல் மற்றும் ஆட்சி மாற்றங்களால் தடைபடக்கூடாது என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...